Friday, August 7, 2009

சதுரங்கம் என்னும் சர்வதேச மொழி

நீங்கள் ஒரு சதுரங்க ஆட்டக்காரராக இருந்தால், சதுரங்க ஆட்டம் உங்களைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டிருக்கும். உங்களுக்கு நல்ல தூக்கம் என்பது இந்த ஆட்டத்தால் வருவது கிடையாது.

மனதில் அன்பும், கருணையும் உள்ளவராக இருப்பவர்களுக்குச் சதுரங்க ஆட்டம் ஆட இயலாது.

பயங்கொள்ளிகளுக்கான ஆட்டமும் இது அல்ல.

சதுரங்க ஆட்டம் ஒரு புரிந்து உணர வேண்டிய ஆட்டம், அது நினைவாற்றலைப் பொறுத்ததன்று.

சதுரங்க ஆட்டம் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ள வேண்டியதன்று. அது சுதந்திரமாகச் சிந்தனை செய்வதற்கும், தீர்மானமான முடிவுகளை எடுப்பதற்கும் பயில வேண்டிய ஒரு ஆட்டமாகும்.

சதுரங்க ஆட்டத்தில் முக்கியமான ஒரு தத்துவம் பாதுகாப்பு அடுத்தது செயல்புரிவது. மற்றவை எதுவுமே முக்கியமானவை அல்ல.

ஒரு ஆட்டம் எப்போது பதட்டமான, ஆபத்தான நிலையை அடைந்துவிட்டது என்பதை உணர்வது சதுரங்க ஆட்டத்தில் பயிலவேண்டிய ஒரு மகத்தான கலையாகும்.

ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதைவிட தெரிந்த கலையை எவ்வளவு செயல்படுத்துகிறார் என்பது சதுரங்க ஆட்டத்தில் முக்கியமானது. இந்தக் கருத்தை அடிக்கடி நினைகூற வேண்டும்.

சரியாக சில மணிநேரங்கள் மட்டும், முறையான நுணுக்கங்களை ஒருவர் கற்பது, பத்து வருடங்கள் அனுபவப்பட்டு கற்கும் பாடத்திற்கு இணையான ஒன்றாகும்.

சதுரங்க ஆட்டம் என்பது ஆட்டக்காரருக்கும் அவருடைய எதிரிக்கும் இடையே நிகழும் ஒரு பேச்சு (அ) உரையாடல் எனலாம். ஆட்டக்காரரின் ஒரு மூவ் என்பது ஒரு பெரிய தவறாக இருக்கலாம் அல்லது ஒரு பெரிய மிரட்டலாகவும் இருக்கலாம். அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்பது, "இவர் இந்த மூவ் செய்வதின் மூலம் என்ன செய்ய நினைக்கிறார்? அவரின் திட்டம் என்னவாக இருக்கும்? அடுத்து என்ன செய்ய முடியும் இவரால்?" என்பது போன்ற வினாக்களை எழுப்புவதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

வெற்றிக்கு வழி

===========

யோசிப்பதால் நான் இருக்கிறேன் என்றார் டெஸ்கார்டெஸ்.

தவறு செய்வதால் நான் இருக்கிறேன் என்கிறார் ஒரு பிரபல செஸ் சாம்பியன்.

.

ஒரு தவறின் சில பகுதிகள் எப்போதுமே சரியாகத் தான் இருக்கும். இது எப்படியென்றால், ஆட்டத்தில் வெற்றி என்பது தவறால் விளைவது தான். தவறு எனப்படுவது ஆடுபவராலோ அல்லது எதிராளினாலோ மட்டுமே. அந்த வகையில் சதுரங்க ஆட்டத்தின் அழகு அதன் ஆட்டக் கள அமைப்பில் இல்லை. ஆட்டக்காரகளின் எண்ணப் போக்குகளில் உள்ளது.

ஆட்டக் களத்தின் முக்கிய அம்சம் ஒரு புத்திசாலி ஆட்டக்காரர் முட்டாளாகத் தெரியப்பட வேண்டும். ஆட்டத்தில் தவறு இல்லையென்றால் புத்திசாலித்தனம் என்பது தெரிய வாய்ப்பில்லை.

ஒரு சராசரி கிராண்ட் மாஸ்டர் ஒரு ஆட்டத்தில் மூன்று தவறுகள் செய்வாரென்றால், ஒரு சராசரி ஆட்டக்காரர் ஒரு மூவில் மூன்று தவறுகளைச் செய்பவராக இருப்பார் என்று ஒரு சொலவடை உண்டு.

சதுரங்க ஆட்டத்தில் ஒரு மோசமான மூவ் முந்தைய அனைத்து நல்ல மூவ்களையும் செயலிழக்க வைத்துவிடுகிறது.

அச்சப்பட்டும், பயமுறுத்தலுக்கும் உள்ளான ஆட்டக்காரர்கள் இறப்பதற்குச் சமமான தோல்வியை அடைவது ஒரு புறம் உண்மையாக இருந்தாலும் அந்த அனுபவத்தின் பயனால் அவர்கள் திறமை மேலும் கூர் தீட்டப்படுகிறது.

சதுரங்க ஆட்டத்தில் எவ்வளவோ மூவ்கள் இருந்தாலும், தோல்வியுறச் செய்து, செயலிழக்க வைப்பது ஒரே ஒரு மூவ் மட்டுமே. அந்த ஒரு மூவ்வை நோக்கிய பயணமே முந்தைய மற்ற எல்லா மூவ்களும் ஆகும்.

வருமிடர் ஏற்றுக்கொண்டு துணிந்து செயலில் இறங்குபவரே ஆட்டத்தில் வெற்றி கொள்ளவது இயலும்

சதுரங்க ஆட்டத்தில் ஒரு வெற்றியாளராக விளங்க வேண்டுமா? அதற்கு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், பலம் பொருந்திய, திறமையான ஆட்டக்காரகளுடன் திரும்பத் திரும்ப விளையாடித் தோற்க வேண்டும்.

இரண்டாவதாக, அவ்விதம் தோற்ற ஆட்டங்களைத் தனிமையில் திரும்பவும் ஆடிப் பார்த்து, ஆட்டத்தில் தான் செய்த தவறுகளை மறுபடியும் உணர வேண்டும்.

இதில் ஒரு கசப்பான உண்மை உள்ளது. இவ்விதம் செய்து பார்ப்பது, நமக்கே நம்மையே பிடிக்காமல் போய்விடும்.

திரும்பத் திரும்ப ஆட்டத்தை ஆடியபடியே இருந்து, தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனத்தின் உச்சம்.

நம் அபார ஆட்டத் திறமையால் எதிராளி ஆட்ட நிலையைக் கண்டு ஆச்சரியப்படுதல் என்பது - நாம் பாதி ஆட்டத்தை வெற்றி கொண்டுவிட்டதற்கான ஒரு அடையாளம்.

சதுரங்க ஆட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் நமக்கு இருக்கும் அடுத்த மூவிற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே.

ஆட்டச் சூழ்நிலை நம்மை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ அதை நாம் கட்டாயமாகச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினால் மோசமான விளைவுகள் நிச்சம் நமக்குக் காத்துக் கொண்டிருக்கும்.

ஆட்ட நிலையில் ஒன்றும் யோசித்து செயல்படுத்த முடியவில்லையா ? அம்மாதிரி சமயங்களில் எதிராளியை அவரின் யோசனையைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்டிப்பாக அதில் பிழை அல்லது மகா மோசமான ஒரு கோணம் இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்பட்டாலே போதும். வெற்றி நிச்சயம்.

மேலும், ஆட்டத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு வெற்றி அடைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு தடுத்தாடும் ஆட்டக் கலையை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சூழ்ச்சி முறையும் சூழ்ச்சித் திறனும்

==========================

ஆட்டநிலையில் ஒரு ஆதிக்கநிலை என்பது சூழ்ச்சித்திறமுடைய செயல்முறைகளைச் செயல்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். தாக்குவது என்பது ஆட்டநிலையில் ஒரு ஆதிக்கநிலை இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். தாக்குதல் நடத்துவது என்பது அதற்கான மனநிலையை முதலில் வரவழைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது. தாக்குதல் நடத்துபவர் மட்டுமே சதுரங்க ஆட்டத்தில் வெற்றி கொள்கிறார். இது ஒரு முக்கியமான விதி.

சூழ்ச்சி முறைக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல். சூழ்ச்சித் திறனுக்குத் தேவை நுண்ணறிவுடன் கூடிய கூர்ந்த கவனிப்பு.

துல்லியமாகத் திட்டமிட்டு வெற்றிக் கொள்ள முடியவில்லை யென்றால், அடுத்த வழி பயமுறுத்தி, குழப்பி தோற்கடித்துவிடுவது.

சதுரங்க ஆட்டத்தில் பயமுறுத்துவதென்பது, செய்து முடிப்பதை விட பலமான ஒரு செய்கையாகும். பயமுறுத்தல் என்பது இரண்டு சமயங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.

ஒன்று-: ஆட்டத்தின் களத்தை தனக்குச் சாதகமான வழியில் முன்னேற்றுவதற்கு, இரண்டாவது ஆபத்தான தோல்வியைத் தழுவக் கூடிய நிலையிலிருந்து முன்னேற்றமான ஒரு நிலைக்கு உயர்த்துவதற்கு.

ஆட்டக்காய்களை வெட்டுக் கொடுத்து இலக்கை அடைய முயல்வது ஒரு அணுகுமுறை.

ஆட்டத் துவக்கநிலையை ஒரு புத்தகம் சொல்லிக் கொடுத்ததுபோல கட்டுக்கோப்புடன் ஆடவேண்டும். ஆட்ட நடுநிலையை ஒரு மாயக்காரனைப் போல நகர்த்திச் செல்ல வேண்டும். ஆட்ட இறுதிநிலையை ஒரு இயந்திரம் போல உணர்வுகளுக்கும், பச்சாதாபத்திற்கும் இடம் கொடுக்காது ஆடி முடிக்க வேண்டும்.

நேர நிர்வாகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனக்கு பத்து நிமிடமும், எதிராளிக்கு ஐந்து நிமிடம் மட்டுமே இருக்கும் ஆட்ட இறுதிநிலை வெற்றிக்கான வாய்ப்புகளை நின்று அவதானித்து உள் வாங்கும் திறமையை பயன்படுத்திக் கொள்ள உதவும்.

சதுரங்க ஆட்டத்தில் நல்ல மூவ் என்று தெரிவதை விரைவில் செய்யக் கூடாது. அதற்கான சூழ்நிலையை மெல்ல மெல்ல உருவாக்கி அந்த மூவ் செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தி பின்பே அதைச் செய்ய வேண்டும்.

ஆட்டநிலமை வெற்றிகொள்ள வேண்டியதாக இருந்தால் எதிராளியின் பலத்தை அழிக்க வேண்டும், ஆட்டநிலமை சரிசமம் செய்ய வேண்டியதாக இருந்தால், எதிராளியின் பலவீனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சதுரங்க ஆட்டக்காரரின் திறமை ஆட்டத்தின் நுணுக்கங்கள், சட்டதிட்டங்கள் பற்றிய அறிவைப் பொறுத்து அல்ல, அவைகளில் உள்ள விதிவிலக்குகளைக் கண்டறிந்து பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. அதாவது, சதுரங்க ஆட்டத்திறமை என்பது கஷ்ட காலங்களில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மீளும் வழியை ஆராய்வது மட்டுமல்ல, அவற்றில் உள்ள விதிவிலக்குகளையும் கண்டறிவதாகும்.

மிகவும் பலம் பொருந்திய - திறமையான ஒரு விளையாட்டு வீரரால் தான் அவர் எந்த அளவிற்கு விளையாட்டில் பலகீனமானவர் என்று அறிய முடியும். அதாவது ஒரு சிறந்த விளையாட்டு வீரரால் தான் அவருடைய மோசமான விளையாட்டை அடையாளம் கண்டுகொள்ள இயலும். எல்லா செஸ் மாஸ்டர்களும் ஒரு காலத்தில் துவக்கநிலை ஆட்டக்காரர்களே.

பொதுவாக ஒரு தப்பெண்ணெம் உண்டு. சதுரங்க ஆட்டத்தைத் திறமையாக போதிப்பவர் ஒரு சிறந்த ஆட்டக்காரராக இருப்பார். ஏனென்றால், ஒரு சிறந்த ஆட்டக்காரர் தான் சிறப்பாக போதிக்க முடியும். உண்மை என்னெவென்றால், திறமையாக போதனை செய்பவர், சதுரங்க ஆட்டத்தில் ஈடுபாடுடைய ஒரு கத்துக்குட்டி எனப்படும் அமெச்சூர் மட்டுமே.

மெய்ப்பித்துக் காண வேண்டிய புனைவியலான உண்மைகளை நிரூபிப்பது துவக்க நிலை ஆட்டக் காரர்களுக்கான வேலை.

தங்கள் ஆட்ட அனுபவங்களை அடுத்தவர்களுக்குச் சொல்லித் தருவது ஆட்டத்தில் அனுபவப் பட்டவர்களுக்கான வேலை.

சதுரங்க ஆட்ட அனுபவங்கள் நிஜ வாழ்க்கை அனுபவங்களுக்கு துணை புரிவது போல மொழிபெயர்க்கப் பட வேண்டியது அவசியம்.

ஆட்டம் ஆடும் எதிராளியை ஒரு எதிரியாக பாவிக்காமல், ஆட்டக் காய்களையே எதிரிகளாக பாவிக்கும் மனோநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

சதுரங்க விதிகள்:

=============

1.திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமே கற்றுக் கொள்வதின் ஆன்மநிலை.

2.முகச் சவரம் செய்யக் கற்றுக் கொள்வதென்றால் அடுத்தவரின் முகம் தான் முதலில் சரியாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு தான் கற்றுக் கொள்வதின் பலன் முழுமையாகப் போய் சேரும்.

3.சதுரங்க ஆட்டம் என்பது அறிவிற்கும், தர்க்கத்திற்கும் மட்டுமான ஒரு ஆட்டம் அல்ல

4.ஆட்டத்தில் ஒருவர் நன்றாக ஆடவேண்டும் என்பது தேவையில்லை. எதிராளியை விட நன்றாக ஆடினாலே போதுமானது.

5.ஐயப்படுவதும், அவநம்பிக்கை கொள்வதும் சதுரங்க ஆட்டக்காரரின் குணாதிசயமாக இருத்தல் வேண்டும்.

6.ஒரு நல்ல ஆட்டக்காரராவது என்பது என்றுமே ஒரு தாமதித்த நிலை அல்ல. அந்த நிலையை யார் விரும்பினாலும் அடைய முடியும்.

7.ஒரு ஆட்டக் காயைப் போல இருக்கக் கூடாது. ஒரு ஆட்டக்காரர் எல்லா ஆட்டக் காய்களையும் நிர்வகிப்பது போல இருக்க வேண்டும்..

8.முதுகில் குத்துப் படாமல் வாழ வேண்டுமென்றால், நம் பின்னால் யார் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ற அறிவு நமக்கு நிச்சயம் வேண்டும்..

9.சதுரங்க ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பது பாதி ஆட்டம் ஆடி முடித்தற்கு சமம். எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்திருப்பது மீதி ஆட்டம் ஆடி முடித்ததற்கு சமம்.



நன்றி
கே. ராமப்ரசாத்
http://sathurankam.wordpress.com

No comments:

Post a Comment