உலகில் உள்ள உள்ளரங்க விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலைகொடுக்கும் விளையாட்டு சதுரங்கம். இது ஆங்கிலத்தில் செஸ் (CHESS) என அழைக்கப்படுகிறது. 32 காய்களுடன் 64 சதுரங்களைக் கொண்ட பலகையில் இருவரால் ஆடப்படும் விளையாட்டு. இவ்வாட்டம் 6 ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இது பாரசீகம் ஊடாக ஐரோப்பாவைச் சென்றடைந்துள்ளது. பாரசீகக் கவிஞன் உமர்கயாம் தனது `றுபையாத்' எனப்படும் கவிதைத் தொகுப்பில் உலக வாழ்க்கையை சதுரங்க காய்களிற்கு ஒப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
மொகஞ்சதாரோ , ஹரப்பா நாகரிக காலத்தில் சதுரங்க ஆட்டம் இருந்ததற்கும் ஆதாரங்கள் உள. இவ்வாட்டத்திற்கான பொதுவிதிகள் 16 ஆம் நூற்றாண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்விளையாட்டு மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ரஷ்யாவிலேயே நிலை கொண்டது. அங்கு குழந்தைகளுக்கு முறையாக சதுரங்க விளையாட்டுக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பாடசாலைகளிலும் ஒரு பாடமாக புகட்டப்படுகிறது. இன்றும் ரஷ்யா சதுரங்க விளையாட்டிலே முன்னணியிலேயே திகழ்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு தொடர்ந்தும் ரஷ்ய நாட்டு சதுரங்க வீரர்களே உலகச் சம்பியன்களாக இருந்து வந்திருக்கின்றார்கள். சதுரங்கமானது திறமையை வளர்க்கக்கூடியதெனவும் புத்திக்கூர்மையை அதிகரிக்கக் கூடியது என்றும் மனக்குவிப்பை உண்டு பண்ணும் சக்தியுடையதெனவும் எண்ணப்பட்டது. சவால்களை சரியாக அறிந்து எதிர்நோக்க சிந்தனையைத் தரக்கூடியது என்றும் நம்பப்பட்டது. போர்க்கள வியூகங்களை வகுக்கும் திறமையை வளர்க்கக்கூடியதெனக் கருதப்பட்டதும் உண்டு. இலங்கையிலே தமிழ் பேசும் மக்களிடையே இவ்விளையாட்டு பிரபல்யம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி யுகமும் கணினி வளர்ச்சியும் காலச்சூழ்நிலையும் சதுரங்க வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்விளையாட்டில் பலர் சிறந்தவர்களாய் இருந்தார்கள் என்பது சிலருக்குத் தெரியலாம். தமிழ்நாடானது ஆனந்தனை உலகச் சம்பியனாகத் தந்து புகழ் படைத்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஐக்கிய அமெரிக்காவிலும் சதுரங்க விளையாட்டு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. இது அமெரிக்காவின் பெருமைக்கு ஒரு கறையாகத் தோன்றியதென்பதை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால், அந்தக் குறை 1972 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து (ICELAND) தலைநகரான றெஜாவிக்தில் அமெரிக்கரான பொபி பிஷர் ரஷ்ய நாட்டு உலக சதுரங்க வீரன் ஸ்பாஸ்கி (SPASSKY) யை தோற்கடித்ததனால் இல்லாமல் போனது. 1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்க சம்பியன் போட்டி கிறாண்ட் மாஸ்ரர் (GRAND MASTER) செவட்டோசார் கிளிகோரிக் எனப்பட்ட யூகோசிலாவிய நாட்டைச் சேர்ந்தவரால் "நூற்றாண்டின் சதுரங்கப் போட்டி" யென வர்ணிக்கப்பட்டது. உலகம் முழுவதுமே சதுரங்க விளையாட்டானது முதன்முதலாக பிரபலமாகியது ஸ்பாஸ்கி, பிஷர் ஆகியோரிடையே நடந்த உலக சதுரங்கப் போட்டியின் போதுதான் என்பது பிரதானமாகக் குறிப்பிடத்தக்கது. அதற்கு காரண கர்த்தா பிஷர் தான். அன்றைய நாட்களில் சதுரங்க தொடர்களின் முடிவுகளை ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் படிக்க மக்கள் காத்திருப்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. மாலை நேர பத்திரிகைப் பதிப்புகளிலும் சதுரங்கத் தொடர் முடிவுகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. சதுரங்க விளையாட்டை அறியாதவர்களும் இவ்விளையாட்டைத் தெரிந்துகொள்ள இது வழிவகுத்ததென்றால் அது மிகையாகிவிடாது. அவ்விதமான சதுரங்கப் போட்டி 1972 இற்கு முன்பும் நிகழ்ந்ததுமில்லை. பின்பும் நிகழப்போவதுமில்லை. ஸ்ரிபன் மொஸ் (STEPHEN MOSS) புரொண்ட் லையின் (FRONT LINE) இதழில்` கடைசிச் சக்கரவர்த்தி' என்று தலைப்பிட்டு பிஷர் பற்றிய கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார். THE LAST EMPEROR என்று அவர் பொபி பிஷரை குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாகவிருக்கிறது. சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் அலகையின் கப்பபிளங்கா, லஸ்கர், கெரஸ், நிம்சோவிச், பொட்வினிக், மார்ஷல், கார்போவ் என்று பல ஜாம்பவான்கள் காணப்பட்டாலும் பொபி பிஷரிற்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. பொபி பிஷர் 1943 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு ஜேர்மனியர். தாய் ஒரு யூதப்பெண். பிஷரது மூத்த சகோதரி தான் பிஷர். சிறுவனாயிருக்கும் பொழுது அவருக்கு சதுரங்க ஆட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிஷர் ஆங்கிலத்தில் சொல்வது போல் வாயில் வெள்ளிக் கரண்டிகளுடன் பிறந்தவரல்லர். பிஷருடைய குடும்பம் புருக்லினில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். இவர் தனது 6 ஆவது வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். அவரது அபாரத்திறமை 13 வயதில் அவரை அமெரிக்க யூனியர் சதுரங்க போட்டியில் வெற்றியை பெற்றுக்கொள்ளச் செய்தது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும் 14 ஆவது வயதில் ஐக்கிய அமெரிக்க சம்பியன் பட்டத்தை வெல்லச் செய்தது. அவரது 15 ஆவது வயதில் பெரிய ஆசான் (GRAND MASTER) என்ற பட்டத்தையும் சம்பாதித்துக் கொண்டார். மிகவும் குறைந்த வயதில் இப்பட்டத்தை பெற்றவர் என்ற பெருமையும் இவரிற்கே உரியது. பிஷர் சதுரங்க ஆட்டத்தில் மிக வேகமாக முன்னேற்றமடைந்தார். 1970 இல் FIDE எனப்பட்ட சதுரங்க சர்வதேச சபையில் அதிகாரபூர்வ வெற்றி எண்ணிக்கையில் 20 பெரிய ஆசான்களுக்கெதிரான (GRAND MASTERS) சதுரங்க ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்ட முதல் பெரிய சதுரங்க ஆசானாக கருதப்பட்டார். இன்று, பெரிய சதுரங்க ஆசானங்களிடையே நடக்கின்ற போட்டிகள் சரிசமமாகவே (Draw) முடிவடைகின்றன. அத்தகைய ஆட்டங்களை இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைப்பதில்லை என்று பலர் விசனமடைகின்றார்கள். இங்கு நாம் பிஷரின் தன் நம்பிக்கையையும் சதுரங்க விளையாட்டில் அவரது மேலாதிக்கத்தினையும் அவதானிக்கலாம். பிஷர், கணினியுகத்திற்கு முற்பட்டவர். சதுரங்க விளையாட்டில் ஆரம்ப நகர்த்தல்களை (OPENINGS) ஆராய புதிர்களை கண்டுபிடிக்க இன்றைய நாட்களில் கணினி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஆய்வுகளை பிஷர் கணினியின் உதவியின்றி தனியாகவே ஆய்ந்து அறிந்து கொண்டிருந்தார். இவர் காய் நகர்த்தும் முறையைப் பார்த்த பெரிய ஆசான்களே (GRAND MASTERS) மூக்கிலே விரலை வைத்தார்களாம். 1972 இல் நடந்த நூற்றாண்டின் சதுரங்க ஆட்டம் றெஜாவிக் நகரில் நடைபெற்றது. பிஷர் உலகச் சம்பியன் போட்டியில் விளையாட பல முன் நிபந்தனைகளை விதித்தார். போட்டி தாமதமானது. அப்பொழுது அமெரிக்க ராஜாங்க செயலாளராக இருந்த கீசிஞ்சர் நேரடியாக பிஷருடன் பேசி உடன்பட வைத்தமை வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகும். உலக சதுரங்க வரலாறுகாணாத சிறந்த திறமை மிகுந்தவராக பிஷர் இருந்தபோதும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்தன. ஓர் விசித்திரமான மனிதராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு ஏற்படுத்திய அவரது சாதனை அவரது ஆரம்பமும் முடிவும் ஆகிவிட்டது. அவர் 1975 இல் உலக சம்பியன் பட்டத்தை காத்துக்கொள்ள, போட்டியில் கலந்து கொள்ள, நடைமுறைச் சாத்தியமற்ற சில முன் நிபந்தனைகளை வைத்தார். F.I.D.E. எனப்பட்ட சர்வதேச சதுரங்க மன்றம் எவ்வாறு முயன்றும் முடியாத பட்சத்தில் பிஷர் போட்டியில் கலந்து கொள்ளாமலே உலக சதுரங்க பட்டத்தை இழக்க நேரிட்டது. இதனால் மீண்டும் ரஷ்யாவைச் சேர்ந்த அனற்றோலி காப்போவ் உலக சதுரங்க சம்பியனானார். 1975 இற்குப் பின் பிஷர் தனிமைப்பட்டு சமூகத்தின் நின்றும் ஒதுங்கி வாழ்ந்தார். இருபது வருடங்களின் பின் 1992 இல் ஸ்பாஸ்கியுடன் தனிப்பட்ட போட்டியில் விளையாடினார். ஐக்கிய அமெரிக்காவுக்கு வேண்டாத மனிதனானார். புடாபெஸ்ட் நகரில் தாடியுடன் இடையிடையே காட்சியளித்தார். அமெரிக்காவிற்கே செல்ல முடியாத ஊதாரிப் பிள்ளையானார். இச்சந்தர்ப்பத்தில் ஐஸ்லாந்து பிஷரிற்கு ஆதரவளிக்க முன்வந்தது. பொபி பிஷரின் உலக சாதனைக்கே களமாக அமைந்த ஐஸ்லாந்து 2005 இல் பிஷரின் இறுதிக் கால வாழ்க்கைக்கு அடைக்கலமளித்த தேசமாக அவரிற்கு வசிப்புரிமை அளித்து வரவேற்றது. சதுரங்க சிம்மாசனத்தின் கடைசிச் சக்கரவர்த்தி கைகளால் சதுரங்க காய்களையே தொடாது வாழ்ந்து முடித்தார். "செக்ஸ் ஐ விட செஸ் சிறந்தது" (CHESS IS BETTER THAN SEX) என்று கூறிய பிஷர், 64 சதுரங்களையே தமது வீடாக எண்ணியவர் இத்தகையதோர் நிலைக்கு தள்ளப்பட்டார். பிஷரைப்பற்றி ரஷ்ய முன்னை நாள் உலக சதுரங்க சம்பியன் அவரைப் பாராட்டி `ரைம்ஸ்' (Times) என்ற ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை பற்றி குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகிறேன். பிஷரில் குறைகள் இருந்த போதிலும் அவரது அபாரத்திறமைக்கு அவர் நினைவு கூரப்படவேண்டியவர் என்கிறார். தான் படித்த சதுரங்கம் பற்றிய நூல்களுள் "என் நினைவில் நிற்கும் 60 ஆட்டங்கள்" என்ற பிஷரது நூலும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். பிஷருடைய வெற்றியின் விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது எனவும் போட்டியில் அவரை எதிர்க்க முடியாத சக்தியுடன் விளையாடினார். அவரைப் போல் ஒவ்வொரு ஆட்டத்திலும் இறுதிவரை போராடியவர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். சதுரங்கம் என்ற விளையாட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்காக இரவும் பகலும் பாடுபட்டவர் என்றும் சதுரங்க ஆட்டத்தில் புதிய நகர்த்தல் முறைகளை கொண்டுவந்தவர் எனவும் பிஷர் ஒரு சதுரங்க புரட்சி எனவும் அப்புரட்சி இன்று தொடர்கிறது என்றும் எழுதியுள்ளார். அவரது எதிராளிகளே அவரைப் பாராட்டினார்கள் என்று காட்டியிருப்பது இங்கு எடுத்துக்காட்ட வேண்டியதொன்றாக இருக்கிறது. பிஷருடைய வாழ்க்கையை வைத்து சதுரங்க ஆட்டத்தையே குறைகூறுவது பொருந்தாது. பிரித்தானிய சதுரங்க சம்பியன் பில் காட்ஸ்ரன் (BILL HARTSTION) பின்வருமாறு குறிப்பிட்டார். ""Chess does not drive people mad' it keeps mad people sane' சதுரங்க ஆட்டமானது மனிதரை பைத்தியமாக்கிவிடாது. ஆனால் பைத்தியக்காரர்களையே புத்திசுவாதீனம் உள்ளவர்களாக வைத்துக் கொள்ளும். 64 சதுரங்களை ஆட்சிபுரிந்த பிஷர் தனது 64 ஆவது வயதின் இறுதியில் 18.01.2008 இல் ஐஸ்லாந்தில் காலமானார். பொபி பிஷர் மறைந்தாலும் சதுரங்க வரலாறு அவரை என்றும் மறந்துவிடாது. சதுரங்க ஆட்டத்தை உலகறியச் செய்த பெருமையும் பிஷர்ரையே சார்ந்ததே. சதுரங்க ஆட்டத்தின் கடைசி சக்கரவர்த்தி பிஷர் மறைந்த ஆண்டான 2008 இல் பல புதிய தலைமுறையினர் சதுரங்க ஆட்டக்காரர்களாக உருவெடுப்பார்கள் என நம்புகிறோம். |
சதுரங்க ஆட்டம் பற்றி மற்றுமல்லாமல், ஃபிஷர் குறித்த பல தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவியிருக்கிறீர்கள். அருமையான பதிவு.
ReplyDeleteஅரிய தகவல்கள் நிறைந்டஹ் இடுகை = சதுரங்க சாம்ராஜ்யத்தின் சக்கரவ்ர்த்தியாகத் திகழ்ந்த பாபி பிஷர் கடைசிக் காலத்தில் இது மாதிரி நடந்து கொண்டது வருந்தத் தக்கது.
ReplyDeleteஎன்ன செய்வது ..... விதி வலியது
வேர்டு வெரிfஇகேஷன் வேண்டுமா
ReplyDelete